BOOMI INTERNATIONAL RESEARCH JOURNAL Of TAMIL (BIRJT)
காலந்தோறும் தமிழிசை
முனைவர் த. அருள் பத்மராசன்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி,
பொன்னேரி- 601204
கைப்பேசி: 9840566211
மின்னஞ்சல்: arulpadmarajan.d@gmail.com
முத்தமிழ் எனப் போற்றப்படும் தமிழ் மொழியில் இசைத்தமிழ் என்பது நடு நாயகமாகத் திகழ்கிறது. இசை என்னும் சொல் ‘இயை’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது. இசைதல் என்பது சேருதல், பொருந்துதல், ஒன்றாதல் என்று பொருள்படும். இப்படி இசையோடு கூடிய செய்யுள் வடிவத்தைத்தான் பண்டைத் தமிழர் அறிந்து வைத்திருந்தனர். இலக்கியம் மட்டுமின்றி வானநூல், கணித நூல், சோதிட நூல், வைத்திய நூல் என எல்லா நூல்களின் கருத்துகளிலும் செய்யுள் வடிவமே இருந்தது. பண்டைத் தமிழ் மக்கள் இராகத்தைப் பண் என்று கூறினர். பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியனார் ஐந்து வகை நிலத்திற்கும் ஐந்து பண்களை வகுத்தார். ஐந்து பண்களும் நிலத்திற்கேற்றாற்போல சிறுசிறு வேறுபாடுகளைக் கொண்டு இருந்தது. இந்தப் பண்களை இசைத்துப் பாடுவோர் பாணர் எனப்பட்டனர். இந்தப் பாணர்கள் சேரிகளில் வாழ்ந்தார்கள். கல்லாவாய் பாணர்கள், புலையர்கள் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களிடமிருந்துதான் தமிழ் இசை தோன்றியிருக்கிறது. தோன்றியது மட்டுமின்றி உலகமெல்லாம் அவர்களின் இசை உலா சென்றுள்ளது. இந்த இசை உலகமெல்லாம் எப்படி சென்றது? இசைக் கலைஞர்கள் வாழ்வு எப்படியிருந்தது? இசையின் இன்றைய நிலை யாது? என்னும் வினாக்களுக்கு விடை தருவதாக இக்கட்டுரை அமைகிறது.
உலகமெல்லாம் சென்ற தமிழிசை
கிரேக்கர் தமிழருடன் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழர் கிரேக்கரை ‘யவனர்’ என்று கூறினர். அலெக்சாண்டர்(கி. மு. 356-323) கிரேக்க நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் போது தம்மோடு ஒரு தென்னிந்திய இசை வல்லுநரைக் கூட்டிச் சென்றார் என்பதை வரலாற்றின் வழியாகத் தமிழக மக்கள் அறிந்துள்ளனர். “கிறிஸ்துவுக்கு முன் ஐந்தாம் நூற்றாண்டில் பிதாகோரசு(Pythagoras) என்னும் கிரேக்க தத்துவ அறிஞர் மற்றும் கணித அறிஞர் இந்தியாவுக்கு வந்தார். இங்குள்ள இசையைக் கற்றுக்கொண்டு தம் நாட்டிற்கும் சென்று கிரேக்க நாட்டில் இந்த இசைக் கூறுகளை விளக்கினார். தமிழர்களின் இசை நுட்பத்தை வேறு வடிவில் விளக்கியதால் தென்னிந்திய இசை குறித்த குழப்பத்தையும் அவர் அங்கு தோற்றுவிக்கக் காரணமாக இருந்தார்”(ப.54) என்கிறார் ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் நூலில் ஆபிரகாம் பண்டிதர்.
தமிழர்கள் ஐவகை நிலத்திற்கேற்ப பண்களை அமைத்ததுபோல கிரேக்கர்களிடமும் தம் நிலப்பகுதிக்கு ஏற்றாற்போல பண் அமைக்கும் முறைமை உள்ளது. சான்றாக, டோரியான்(Dorian) என்னும் நிலப்பகுதியில் வாழ்ந்த கிரேக்க மக்கள் Dorian mode என்னும் இசையைக் கையாண்டுள்ளனர். “தோரியன் நிலப்பகுதியில் வாழ்ந்த கிரேக்க மக்கள் தோரியர் எனப்படுவர். இவர்கள் எகிப்திலிருந்து வந்து குடியேறியவர்கள். அவர்கள் வாழ்ந்த நிலத்தின் பெயரையே இசைப் பண்ணிற்கும் மேற்கொண்டனர்” என எஸ். கே. சிவபாலன் உலக இசைகளுக்குத் தமிழ் இசையின் பங்களிப்பு என்னும் நூலில் தெரிவிக்கிறார்.
சங்க காலத்திலேயே ‘பறை’ என்னும் தோற்கருவி இருந்தது. இசைக்கருவியைக் குறிக்கும் அந்தச் சொல்லுக்கு ‘கூறுதல்’ என்றும் பொருள் உண்டு. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் அங்குள்ள பறைகளை Talking Drums என்று பெயரிட்டு வழங்கி வருகின்றனர். பண்டைத் தமிழ் இசை நூல்களில் கூறப்படும் இடை சுருங்கிய பறை இன்று சைனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் புகழ் பெற்று இருப்பதையும் அந்த நாட்டின் இசை அரங்குகளில் பெண்கள் இப்பறையை இசைப்பதையும் காணமுடிகிறது. “கி. பி. 618-970-இல் தமிழகத்திலிருந்து இந்த இசைக்கருவி சைனா சென்றதாகச் சைனாவின் இசை வரலாறு கூறுகிறது. ஜப்பானில் காகு இசையிலும் கொரிய இசையிலும் இடைசுருங்கு பறை பெரிய அளவில் உருவாக்கப்பட்டு இசைக்கப்படுகிறது. தமிழன் கண்டறிந்த ஏழிசை என்பதை உலகின் பல நாடுகள் தங்களின் இசைக் கூறுகளில் கொண்டு இயங்கி வருகிறது. உலக நாடுகளின் இசையே தமிழ் இசை தான்”(ப.56) என்று ‘இசைத்தமிழின் உண்மை வரலாறு’ என்னும் நூலில் ‘PTR கமலத் தியாகராசன்’ கூறுகிறார். இந்தக் கூற்றின்படி, தமிழிசையின் தோற்றத்திற்கு வித்திட்டவர்கள், ‘கல்லாவாய் பாணர்கள்’ என்று அழைக்கப்பட்ட பாணர்கள். யாழ் மீட்டிப் பாடியதால் இவர்கள் யாழ்ப் பாணர் என்றழைக்கப்பட்டனர்.
பாணர்களோடு கூத்தர், விறலியர், பொருநர் என்போர் உடனிருந்தனர். இவர்கள் இசைக் கலைஞராக மட்டுமன்றி ஆடற் கலைஞராகவும் இருந்துள்ளனர். சங்க காலத்திற்குப் பின் வந்த சிலப்பதிகாரம் மாதவியை ஆடல், பாடல் கலைகளில் வல்லவள் என்று கூறுகிறது. அவளிடமிருந்து தான் இசை பொது வெளிக்கு வந்துள்ளது. வேத்தியல், பொதுவியல் என இருவகை ஆடலிலும் வல்லவளாக மாதவி திகழ்ந்துள்ளாள். பாணர், விறலி, பொருநர், கூத்தர் என்னும் கலைஞர்கள் வாழ்ந்த முறையைக் காணலாம்.
இசைக் கலைஞர்கள் வாழ்வு
தொல்பழங்காலத்தில் மன்னர்களின் அரண்மனைகளில் புலவர், பாணர், பொருநர், விறலியர், கூத்தர் எனக் கலை வல்லுநர்கள் வந்து மன்னனைக் காணுவதற்குத் தனி மண்டபங்கள் இருந்தன. இந்த இடத்தில் சிறப்பு நாட்களில் மக்களும் கூடுவர். மன்னன் புகழ் பாடுவதோடன்றிக் கலையை நுகர்கின்ற இடமாகவும் அது காட்சி அளித்தது. அந்த இடங்களில் பாணர்கள் பாடிய வாய்மொழிப் பாடல்களே பின்னர் புலவர்கள் கைக்குச் சென்று இலக்கியமாக வளர்ந்தது என்று சான்றோர் கூறுகின்றனர். இதனால் அக இலக்கிய வளர்ச்சிக்கு முன்னமே பாடலுக்கு உரமூட்டியவர்கள் பாணர்கள் எனத் தெரிய வருகிறது. இந்தப் பாணர், கூத்தர், பொருநர், விறலியர் முதலானவர்களின் கலை வாழ்வைத் தொல்காப்பியர், ஆற்றுப்படை நூல்களுக்கு இலக்கணம் வகுக்கும் இடத்தில்,
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்” (தொல். பு.இ. 88: 3-6)
என்ற அடிகளில் குறிப்பிடுகிறார்.
நால்வகை கலைஞர்கள்
பொருநர், பாணர், விறலியர், கூத்தர் என்னும் நால்வகை கலைஞரைப் பற்றிக் காண்போம். பொருநர் என்பதற்கு, மற்றொருவர் போல வேடம் கொள்வோர் என்பது பொருள். இவர்கள் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பல வகைப்படுவர். பண் பாடுவோர் பாணராவர். இசைப்பாணர், யாழ்ப்பாணர், பிச்சை ஏற்றுப் பிழைக்கும் மண்டைப் பாணர் எனப் பாணர் மூவகைப்படுவர். இவருள் யாழின் அளவைப் பொறுத்து சிறிய யாழை வாசிப்போர் சிறு பாணர் என்றும் பெரிய யாழை வாசிப்போர் பெரும்பாணர் என்றும் பாகுபடுத்தப்பட்டனர். இவர்கள் அகத்திணை மரபிலும் இடம் பெறுகின்றனர். தலைவன், தலைவி, பரத்தை ஆகியோருக்கிடையே தூது செல்லும் வாயில்களாகவும் இக்கலைஞர்கள் இடம் பெறுகின்றனர்.
“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப”(தொல். கற்பியல். 52)
மேற்கூறியவர்களில் கூத்தரும் பாணரும் நீண்ட தொலைவு பயணம் செய்து செய்தி உரைப்பவர்களாக இருந்ததை,
“நிலம் பெயர்ந்து உரைத்தல், அவள் நிலை உரைத்தல்,
கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய”(தொல். கற்பியல்.28)
என்னும் கற்பியல் நூற்பா தெளிவுபடுத்துகிறது. விறல்பட ஆடும் மகளிரை விறலியர் என்பர். ஆற்றுப்படை நூல்கள் ஐந்தும் விறலியின் திறன் பற்றிப் பேசுகின்றன. கூத்துக் கலையில் வல்லவரைக் கூத்தர் என்பர். கூத்து நிகழ்த்துவோர்களைக் கூத்தர் எனத் தொல்காப்பியம் சுட்டும். இந்நால்வகை கலைஞர்கள் மன்னனாலும் புலவர்களாலும் மக்களாலும் சிறப்பு பெற்றிருந்ததை இனிக் காணலாம்.
கலைஞர்களை மன்னனும் மக்களும் ஆதரித்தல்
பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய நூல்கள் மன்னன் கலைஞர்களை அழைத்து விருந்து போற்றிய திறத்தை எடுத்துரைக்கின்றன. கலைஞர்கள் மன்னனோடு அணுக்கமாக இருந்தார்கள் என்பதற்கு ஆற்றுப்படை நூல்கள் சாட்சியம் கூறுகின்றன.
கலைஞர்களோடு புலவர்களின் நெருக்கம்
ஆற்றுப்படை நூல்களைப் பாடிய புலவர்கள் மன்னர்களின் கொடைத்திறனை வியந்து பாடியுள்ளனர். ஆயினும் நூலின் தலைப்பினை மன்னனோடு இணைத்துப் பெயரிடாமல் கலைஞர்களோடு இணைத்துப் பெயர் சூட்டி உள்ளனர். இதனால் கலைஞர்கள்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் புலவர்கள் என்பது புலனாகிறது.
இசைக் கலைஞரை மக்கள் ஆதரித்தல்
பாணர், கூத்தர், விறலியர், பொருநர் ஆகிய இசைக் கலைஞர்கள் மன்னரைத் தேடிச்செல்லும் வழியில் மக்கள், கலைஞர்களை வீட்டுக்குள் அழைத்து உணவு தந்து பரிமாறியதனை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இசைக் கலைஞர்கள் தாம் அறிந்து வைத்துள்ள யாழ் மீட்டும் திறன், இசை நுணுக்கம், ஆடல் வகைகள் முதலியவற்றைக் கூறும் ஆற்றுப்படை நூல்கள் அவர்தம் வாழ்வையும் எடுத்துரைக்கின்றன. அவர்கள் தங்க இடமின்றி நாடோடிகளாக வாழ்ந்ததுடன் வறுமை அவர்களை வாட்டி எடுத்த நிலையினையும் நூல்கள் வாயிலாகக் காண முடிகிறது. இவ்வாறு திறம் வாய்ந்த இசைக் கலைஞர்கள் ஏன் சமுதாயத்தவரோடு இணைந்து இருப்பதை ஏற்படுத்திக்கொண்டு தம் வாழ்வை நடத்தவில்லை என எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
சங்க காலத்திற்குப் பிறகு களப்பிரர்கள் ஆட்சிக் காலத்தில் சமண பெளத்த எழுச்சியின் காரணமாக இசைக்கலை தோய்வுற்றது. மன்னனைத் தேடிப் பொருள் பெற்று வாழ்ந்த இசைக் கலைஞர்கள் பல்லவர் காலத்தில் ஆண்டவனைப் பாடிக் கைம்மாறு கருதாது வாழ்ந்து வந்தனர். அதனால் தான், தேவாரக் காலத்தைத் தமிழரின் இசை எழுச்சிக் காலமாகக் கருத வேண்டும் என்று கருத்துரைத்தார்கள். சோழர்கள் காலத்தில் வடமொழி செல்வாக்கு ஏற்றம் பெற்றது. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என நின்ற தமிழின் ஏழு சுரங்கள் சப்தம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என வடமொழியில் மாறி அதன் முதலெழுத்துகள் ச,ரி, க, ம, ப, த, நி என மாற்றம் பெறுகிறது. மேலும் நாட்டுப்புற இசையே பிற்காலத்தில் செவ்விசை வளர்ச்சி அடையக் காரணமாக அமைந்தது என்பதனை ‘அங்கயற்கண்ணி’ தம் ‘இசையும் இலக்கியமும்’ நூல்வழி தெளிவுபடுத்துகிறார். இலக்கணம் வகுக்கப்பட்டு பண்பட்ட இசை செவ்விசை(classic music) என்றும் உள்ளத்தில் உந்தும் உணர்ச்சிகளுக்கு ஓர் வடிகாலாக எழும் இசை நாட்டுப்புற இசை என்பது பிற்காலத்தின் புரிந்து கொள்ளுதலாக அமைந்து விட்டது.
பாணர்களில் யாழ் வாசிப்பவரை யாழ்ப் பாணர் என்றுரைப்போர் என முன்னரே கண்டோம். திருநீலகண்ட யாழ்ப் பாணர் பல்லவர் காலத்தில் வாழ்ந்து வந்தார். திருஞான சம்பந்தர் இறைவன்மீது பாடும் அற்புதப் பதிகங்களை திருநீல கண்ட யாழ்ப்பாணர் யாழில் வாசித்து மகிழ்வார். ஒருமுறை திருநள்ளாறு அருகிலுள்ள திருத்தருமபுரம் என்னும் ஊருக்கு இருவரும் வந்தனர். அந்த ஊர் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் ஊர். அங்குள்ள உறவுகள் யாழ்ப்பாணரிடம் ‘உங்கள் யாழிசையால் தான் ஞானசம்பந்தப் பெருமானின் தேவாரப் பதிகங்கள் சிறப்பு பெறுகின்றன’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட பாணர் மனம் பதறியதாகவும் தம் யாழில் அடங்காதவாறு ஒரு பதிகம் பாட வேண்டும் என்று ஞானசம்பந்தரிடம் யாசித்ததாகவும் அவர் பதிகம் பாடியதாகவும் பாணரால் வாசிக்க முடியாமல் போனதாகவும் ஒரு கதை உண்டு. இந்தக் கதை வாயிலாக மிடற்றிசைக் கலைஞர்கள் கருவியை இசைக்கும் கலைஞர்களை விட உயர்வாகக் கருதப்பட்டார்கள் என உணர முடிகிறது.
கிராமப்புற இசையை அதாவது மெட்டுகளை தம் நூலில் புகுத்தி கோபால கிருஷ்ண பாரதியார், அருணாச்சலக் கவிராயர், இராமலிங்க அடிகளார், பாரதியார் எனப் பல்லோர் பாடல்கள் இயற்றினர். கிராமிய இசை வடிவம் இவர்களின் பாடல்களால் செல்வாக்கு பெற்றது. மக்களிசையாக இருந்ததைப் பண்டிதரும் பயிலும் நிலை ஏற்பட்டது. மேலும் மக்களிடம் உள்ள பக்தியின் காரணமாகத் தமிழிசை பக்தி இசையாக மலர்கிறது. தியாகராயர் ராமனைப் பாடிய கீர்த்தனை வடிவங்கள் போற்றப்பட்டன. இசை இயலோடு இணைந்தும் இறைவனோடு இணைந்தும் விளிம்பு நிலை தாண்டி மையத்திற்கு வந்துவிட்டது.
இசையின் இன்றைய நிலை
இசை வரலாற்றை ஆராயும்போது அந்த நாட்டுப் பண்பாட்டு மரபுகள் பெற்ற மாற்றத்தையும் ஆராய வேண்டும். சங்க காலம், பல்லவர் காலம் முதலானவற்றில் ஏற்றம் பெற்ற இசைத் தமிழ்ச் சந்தங்கள் வட நாட்டவர் உறவால் கருநாடகச் சந்தம் ஆனது. விஜயநகர அரசர்கள் கருநாடக இசைக்கும் தெலுங்கிசைக்கும் ஊக்கம் தந்தனர். இந்த நிலை 400 ஆண்டுகள் தொடந்து வந்தது. இசுலாமியர் வருகையால் இந்துஸ்தானி இசை புகழ் பெற்றது. மேல் நாட்டுக் கிறித்தவர் தொடர்பால் மேனாட்டு இசையும் தமிழகத்தில் பரவின. இந்த நிலையை மாற்றித் தமிழிசை வளர்ச்சிக்கு மீண்டும் உயிர்தர 1940- இல் இராஜா சர். அண்ணாமலை செட்டியார் ‘தமிழிசைச் சங்கம்’ என்னும் பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கினார்.
திரையிசை
“கடந்த 75 வருடங்களில் திரையிசை வெவ்வேறு இசை வடிவங்களின் தாக்கத்தைப் பெற்று வருகிறது. ஜி. இராமநாதன் என்னும் தொடக்கக் காலத் திரையிசை அமைப்பாளர் பண்ணிசை மூலம் புராணப் பாடல்களையும் எம். எஸ். விஸ்வநாதன் மெல்லிசை பாடல்களையும், இளையராஜா நாட்டார் இசையையும் ஏ. ஆர். இரகுமான் கலப்பு இசை மூலம் திரை இசையையும் தந்து வருகிறார். மேலை நாட்டவரின் இசையான ராப் இசையையும் ஏர். ஆர். இரகுமான் தம் இசை வழி அறிமுகப் படுத்தி உள்ளார். இன்னும் கூட இந்த இசை வடிவங்கள் மாறி வரலாம்” என்கிறார் மம்மது. காலந்தோறும் இந்த இசை வடிவங்கள் கானா, கலவை இசை எனப் பல நிலைகளில் மாற்றம் பெற்று வருகிறது. “இசை உயிரோடு இருப்பதற்குக் காரணமே திரையிசைதான்”(ப.28) என்கிறார் மம்மது. இசைத்தமிழில் அன்றைய தமிழன் உயர்ந்து நின்றதை இன்றைய தமிழன் உணராது இருக்கிறான். மேற்கத்திய இசைக்கருவிகள் பயன்படுத்தி இசையமைக்கும் முறை இன்று நடைமுறையில் உள்ளது. கிராமங்களில் இன்றும் ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் கிராமிய இசை அதாவது நாட்டுப்புற இசை ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. கிறித்தவ வழிபாட்டு முறையில் மேற்கத்திய இசை பின்பற்றப்பட்டு வருகிறது.
முடிவுரை
இதுகாறும் கண்டவற்றால் பாணர்வழி வந்த தமிழிசை ஆடற்கலைஞர்களோடு இணைந்திருந்தது என்பதையும் உலகம் எங்கும் இசை பரந்ததையும், இசைக் கலைஞர்கள் மன்னர்களாலும் மக்களாலும் போற்றப்பட்டதையும் இசையாளர்களின் வறுமை நிலையையும் விளக்கியுள்ளது. மேலும் கலைஞர்கள் வாழ்வுக்குள்ளேயே உயர்வு தாழ்வு இருந்ததையும் வடவர் வரவால் நிகழ்ந்த நிகழ்ந்த கருநாடக சங்கீதமும் நாயக்கர் வரவால் நிகழ்ந்த தெலுங்கிசையையும் மொகலாயர் வரவால் நிகழ்ந்த இந்துஸ்தானி இசையையும் மேல்நாட்டுக் கிறித்தவர் தொடர்பால் நிகழ்ந்த மேற்கத்திய இசையையும் திரையிசையால் நிகழ்ந்துவரும் மெல்லிசை, நாட்டுப்புற இசை, கலவை இசை வடிவங்களையும் இந்தக் கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது.
துணைநூற் பட்டியல்
அங்கயற்கண்ணி, இ. இசையும் இலக்கியமும், கலையகம் வெளியீடு, சென்னை, 1991.
அமுதா பாண்டியன்(ப), ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம், பரிசல் பத்தக நிலையம், 2019.
கமலத்தியாகராசன், PTR., இசைத் தமிழின் உண்மை வரலாறு, மதுரை, 1997.
சிவபாலன், எஸ். கே., உலக இசைகளுக்குத் தமிழ் இசையின் பங்களிப்பு, இசைக்கோயில் வெளியீடு, 2011.
மம்மது, தமிழிசைத் தளிர்கள், தமிழோசை பதிப்பகம், கோவை, 2006.